குறள்

சான்றாண்மை
குறள் # 981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
குறள் # 982
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று
குறள் # 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்
குறள் # 984
கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
குறள் # 985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
குறள் # 986
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
குறள் # 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?
குறள் # 988
இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்
திண்மை உண் டாகப் பெறின்
குறள் # 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
குறள் # 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை