ஸநாதன தர்மமும் திருக்குறளும்

ஸநாதன தர்மமும் திருக்குறளும்
(பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள்) நாம் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடது எனும் விஷயத்தில் அறிவைத் தருபவை வேதங்கள். வேதக்கருத்துக்களை மக்களுக்குப் புரியும் வகையில் விளக்குகின்ற நூல்கள் ஸ்ம்ருதிகள். திருக்குறள் இந்த வகையைச் சார்ந்தது. ஸ்ம்ருதி என்றாலே நினைக்கப்படுவது என்று அர்த்தம். ஸ்ம்ருதிகள் மூலம் வேதக்கருத்துக்கள் நினைக்கப்படுகின்றன. திருக்குறள் மூலம் வேதக்கருத்துக்களை நாம் நினைப்பதால் திருக்குறள் ஒரு தர்மஸ்ம்ருதி, அர்த்தஸ்ம்ருதி, காமஸ்ம்ருதி; துறவரத்தை பற்றியும் சொல்லியிருப்பதால் மோக்ஷஸ்ம்ருதியுமாகும். வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிற நான்குவித குறிக்கோளாகிய அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு விஷயத்தையும் இதன் வாயிலாக நாம் சிந்திக்கிறோம். ஆக, நமக்கு அறிவைத்தரக்கூடிய நூல்களுள் முதன்மையானவை வேதங்கள். இரண்டாவது இடத்தைப் பெறுவது ஸ்ம்ருதிகள். மூன்றாவது இடத்தைப் பெறுவது மஹான்களுடைய வாழ்க்கை. அதுமட்டுமல்ல, நிலையான மகிழ்ச்சியை நாள்தோறும் வளர்க்கின்ற செயல்களினால் தோன்றும் அனுபவ அறிவும் நமக்கு ப்ரமாணம். இது வேதம், ஸ்ம்ருதி, ஆசாரம் எனும் முதல் மூன்றையும் ஒட்டியிருக்கிறது. இம்மூன்றிலும் நமக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டால், அதுதான் வாழ்க்கைக்கு நன்மையைக் கொடுக்கக்கூடியது. ஆகவே மனம் போன போக்கில் போகாமல் முறையாக வாழவேண்டும் என்றுதான் இந்த நூல்கள் எல்லாம் நமக்கு அறிவுறுத்துகின்றன. சாஸ்த்ரம் கடவுள் நமக்குப் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். பகுத்தறிவைக் கொடுத்த கடவுளே அந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்காக சாஸ்த்ரத்தையும் கொடுத்திருக்கிறார்.  திருக்குறள் போன்ற அற்புதமான நூல்களையும் கொடுத்திருக்கிறார். நமக்கு அறிந்து கொள்கிற சக்தி இருக்கிறது. ஆனால் அறிவு தானாக வேலை செய்யாது. அது சாஸ்த்ரத்துடன் சேர்ந்துதான் வேலை செய்யும். விவேகாநந்தர் சொன்னது போல அறிவு இருக்கிறது. அதை வெளிப்படுத்த வேண்டும். அந்த புத்தி சக்தியை நன்கு வளர்த்து நன்கு பயன்படுத்த வேண்டும். அதற்கு நிறைமொழி மாந்தர் தம் மறைமொழிகளாகிய சாஸ்த்ரங்கள் நமக்கு உற்ற துணைபுரிகின்றன. பெரியவர்கள் ஓர் உதாரணம் சொன்னார்கள்: சுய அறிவு என்பது கண்ணைப் போன்றது; சாஸ்த்ரம் என்பது விளக்கு ஒளி போன்றது. எங்கு இரண்டும் சேர்கிறதோ, அங்கு தவறுகள் நிகழ்வதில்லை. நான் நடந்து போவதென்றால் இருட்டாக இருந்தால் முடியாது; வெளிச்சம் இருந்து கண் தெரியவில்லையென்றாலும் நடந்துபோக முடியாது. ஆக, கண்ணும் தேவை; வெளிச்சமும் தேவை. கண்ணும் வெளிச்சமும் போன்று சுய அறிவும் சாஸ்த்ர அறிவும் என்றார்கள். எனவே நாம் பெற்றுள்ள அறிவை சாஸ்த்ரத்துடன் இணைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும். மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை (குறள் – 636) என்று திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. நுண்ணறிவுடன் சாஸ்த்ர ஞானமும் படைத்திருக்க வேண்டும். சாஸ்த்ரத்தை ஒழுங்காகப் படித்து, மனப்பாடம் செய்து, அதற்கு நன்கு பொருள் தெரிந்துகொண்டால் வாழ்க்கையில் ஒரு துன்பமும் கிடையாது. சாஸ்த்ரம் என்ற சொல்லுக்கு நல்ல விஷயங்களை நமக்குச் சொல்லிக் கொடுத்து கஷ்டம் வராமல், நாம் தப்பு பண்ணாமல் காப்பாற்றுவது என்பது பொருள். (சாஸ் – கற்பித்தல், த்ரம் – காப்பாற்றுதல்) தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் நல்ல கருத்துக்களை எடுத்துக்கூறி, எல்லோரும் இன்பமாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறி வழிகாட்டுகின்ற நூலுக்கு சாஸ்த்ரம் என்று பெயர். நல்ல சாஸ்த்ரங்களைப் படித்து நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம் விருப்பு வெறுப்பை விட்டுவிட்டு நம் புத்தியை சாஸ்த்ரத்துடன் இணைக்க வேண்டும். சாஸ்த்ரங்கள் என்ன சொல்லிக்கொடுக்கின்றன என்றால், வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? குறிக்கோளை அடைவதற்கான வழி என்ன? என்று ஸாதன, ஸாத்யத்தைச் சொல்லிக் கொடுக்கின்றன. எல்லோருடைய குறிக்கோளும் மன அமைதி, ஆநந்தம், துன்பமில்லாத இன்பம். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் நிறையபேருக்கு ‘மன அமைதியைத்தான் நான் விரும்புகிறேன்’ என்பதே புரியவில்லை. அது மட்டுமல்ல, மன அமைதிக்கு என்ன வழி என்பதும் தெரியவில்லை. மன அமைதியைக் கொடுக்கக்கூடியது எது எங்கிற விவேகமும் இல்லை. அப்படியே இருந்தாலும் தெளிவாக இல்லை. என் வாழ்வின் குறிக்கோள் எனக்குத் தெரியாமலும் இருக்கக்கூடாது; தெரிந்தாலும் ஸந்தேஹத்தோடு இருக்கக்கூடாது; தவறான குறிக்கோளாகவும் இருக்கக்கூடாது. அதாவது அஜ்ஞாந, ஸந்தேஹ, விபர்யய ரஹித லக்ஷ்யம். (அறியாமையும் இருக்கக்கூடாது. ஐயமும் இருக்கக்கூடாது. தவறாகவும் இருக்கக்கூடாது). ஔவையார் எளிமையாக அழகாகச் சொல்லியிருக்கிறார், ஈதல் அறம்; தீவினையின்றி ஈட்டல் பொருள் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்; அரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. ஆக, குறிக்கோளைப் பற்றியும், குறிக்கோளை அடைவதற்கான நெறிமுறைகளைப் பற்றியும் சாஸ்த்ரம் சொல்லிக்கொடுக்கின்றது. மனிதன் சாஸ்த்ரத்தைச் சாராமல், பெரியோர்களைச் சாராமல் தன் போக்கிலே மன அமைதியைத் தேடுகிறான். அறியாமையோடு தவறான வழிகளில் மன அமைதியைத் தேடுகிறான். மன அமைதிக்கு மனிதன் செய்யும் இம்முயற்சிகள் எல்லாம் பௌருஷேய ப்ரயத்னம். ஆனால் அவன் முயற்சியெல்லாம் தோற்றுப் போகின்றன. எங்கே பௌருஷேய ப்ரயத்னம் தோற்றுப்போகிறதோ, அங்கே அபௌருஷேய வேதம்தான் உதவி செய்யும்; வேறு வழியே கிடையாது. மனிதன் மன அமைதிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வேதமும், அதன் அடிப்படையில் அமைந்த திருக்குறள் போன்ற ஸ்ம்ருதி நூல்களும் தான் வழிகாட்டித் தருகின்றன. எனவே நம் விருப்பு வெறுப்புகளை எல்லாம் தூரப்போட்டுவிட்டு சாஸ்த்ரத்திடம் நம்மை ஒப்படைத்துவிட வேண்டும்.