திருவள்ளுவர்

தெய்வப்புலவர் திருவள்ளுவர்
 

வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்

ஓதவழுக் கற்ற துலகு     – மதுரைப் பெருமருதனார்

திருவள்ளுவர், வேதத்தின் விழுப்பொருளை, குறள் வெண்பாக்களால் அருளியமையால், இவ்வுலகம் அறநெறியில் வழுவாமல் நிலைத்து  நிற்கிறது என்று திருவள்ளுவ மாலையில் கூறப்பட்டுள்ளது. திருவள்ளுவர், தம் காலத்தில் வழங்கிய தமிழ் நூல்களையும் பிற மொழி நூல்களையும் நன்கு ஆராய்ந்தவர், பல பேரறிவாளருடனும் அரசர் அமைச்சர் முதலியவர்களுடனும் பழகியவர், அரசியல் முதலியவற்றை அறிந்து, தம் அநுபவத்தால் பலவற்றையும் தெரிந்து தேக்கிய அறிவுக் கருவூலத்தை வைத்துக்கொண்டு, பலகாலும் சிந்தித்துக் கருத்துக்களை வகை செய்து, சுருங்கிய சொல்லின் செறிவாகக் குறட்பாக்களால் இந்த அரும்பெரும் நூலை இயற்றினார். இப்படிப் பல துறைகளிலும் அறிவைச் செலுத்தித் தெளிந்து, அழகும் பயனும் விளைய ஒரு நூலைச் செய்வது அரிதினும் அரிய செயல். திருவள்ளுவரின் மதிநுட்பமும் திட்பமும் விரிவும் உயர்வும் இந்நூலால் நன்கு வெளியாகின்றன. செயற்கரிய செய்த இந்தப் பெரும் புலவரைத் தமிழகம் பெற்று உலகுக்குத் தந்திருக்கிறது என்பதை எண்ணி, நாம் பெருமிதம் அடைகிறோம்.-ஸ்ரீகீ.வா.ஜகந்நாதன்,திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு.

வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

-ஸ்ரீமஹாகவி பாரதியார்