திருக்குறள் நூல் அமைப்பு

திருக்குறள் நூல் அமைப்பு
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூல் திருக்குறள். இது பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இந்த நூல் இரண்டு அடிகளையும், ஏழு சீர்களையும் கொண்ட குறள் வெண்பா வகைப்பாடல்களைக் கொண்டது. தொல்காப்பியர் குறள் வெண்பாவைக் குறுவெண்பாட்டு என்று குறிப்பிட்டுள்ளார். இது வடமொழியில் காயத்ரி சந்தஸ் ஆக அமைந்துள்ளது.  இது ஓர் அற நூலாகவும். அறிவு நூலாகவும், நீதி இலக்கியமாகவும் திகழ்கிறது.  வாழ்க்கை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அறவழி நின்று, முறைப்படி பொருளீட்டி, இன்பம் துய்த்து வாழும் மனிதன் சிறப்பென்னும் செம்பொருள் கண்டு, பிறப்பன்னும் பேதமை நீங்கி வீடுபேறு அடைவர் என்பது திண்ணம்.  ஒவ்வொரு பாலையும் உரையாசிரியர்கள் தத்தம் கண்ணோட்டத்திற்குத் தக்கவாறு வெவ்வேறு  இயல்களாகப் பகுத்துள்ளனர். பரிமேலழகர் உரையில் காணப்படும் பகுப்பு முறை இங்கு தரப்படுகிறது.  திருக்குறள் நூல் அமைப்பு  (பரிமேலழகர் உரையின்படி)  அறத்துப்பால்: பாயிரம் – 4, இல்லறம் – 20,               துறவறம் – 13, ஊழ் – 1 பொருட்பால்: அரசியல் – 25, அங்கஇயல் – 32,            ஒழிப்பியல்  – 13  காமத்துப்பால்: களவியல் – 07, கற்பியல்  – 18 அறத்துப்பாலில் – 38, பொருட்பாலில் – 70, காமத்துப்பாலில் – 25 என 133 அதிகாரங்கள் உள்ளன. இல்லறவியல் – குடும்ப வாழ்க்கைக்குரிய அறங்களை விளக்குகிறது துறவறவியல் – துறவு வாழ்க்கைக்குரிய அறங்களை விளக்குகிறது ஊழ்    – விதியின் வலிமையைக் காட்டுகிறது அரசியல்  – அரசனது இயல்பை விளக்குகிறது  அங்கவியல் – அரசின் கூறுகளை விளக்குகிறது  ஒழிபியல்   – எஞ்சியவை  களவியல்    – திருமணத்திற்கு முந்திய காதல் வாழ்க்கை  கற்பியல்      – திருமணத்திற்குப் பிந்திய வாழ்க்கை திருக்குறள் – உரையாசிரியர்கள்  இன்று திருக்குறளுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உரைகள் உள்ளன. முதன் முதலில் திருக்குறளுக்கு உரை செய்தவர்கள் பத்துப்பேர், அவர்கள் பெயர் வருமாறு: 1) தருமர், 2) மணக்குடவர், 3) தாமத்தார், 4) நச்சார், 5) திருமலையார், 6) மல்லர், 7) பரிப்பெருமாள், 8) காளிங்கர், 9) பரிதியார், 10) பரிமேலழகர்.  திருக்குறளின் தனிச்சிறப்புகள் குறள் வெண்பாவால் ஆன பழைய நூல் இது ஒன்றே. தமிழ் எழுத்துக்களில் முதலாகிய ‘அ’ வில் தொடங்கி கடைசி எழுத்தாகிய ‘ன்’ என்பதில் முடிகிறது. பத்துப்பேர் உரை எழுதிய வேறு நூல் இல்லை.  சிறப்புப்பாயிரப் பாடல்கள் பல சேர்ந்து திருவள்ளுவமாலை என்று ஒரு நூலாகவே அமைந்திருக்கின்றன. இதுவும் இந்த நூலுக்கே வாய்த்த பெருமை. இதனைப்போல பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் வேறு இல்லை.  நீதி நூலாகவும் தத்துவ நூலாகவும், இருப்பதோடு கவிச்சுவை நிறைந்ததாகவும் விளங்குகிறது. எல்லாக் காலத்துக்கும், இடத்துக்கும் பொருத்தமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறது.  திருக்குறட்பாக்களைப் பிற்பகுதியில் வைத்து முற்பகுதியில் அதற்கு விளக்கமாக வரலாறுகளைக் கூறும் செய்யுட்களை உடைய பல நூல்கள் தமிழில் உள்ளதும் திருக்குறளின் தனிச்சிறப்பாகும்.  பரிமேலழகர் உரைப்பாயிரம் இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் நெறி அறிந்து எய்வதற்கு உரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு.  அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரண வகையால் கூறப்படுவது அல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம்.  அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம். வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.  வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே எனது எனது என்று இருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன் கோடல் முதலிய பதினெட்டுப் பதத்ததாம். தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத் தக ஒறுத்தல்.  இவற்றுள் வழக்கம் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்த வாவல்லது ஒழுக்கம் போல் மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பு இலவாகலானும். அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக்கொள்ளப்பட்டது.  அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தேறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொது இயல்புபற்றி இல்லறம், துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.  அவற்றுள், இல்லறமாவது இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று, அதற்குத் துணையாகிய கற்புடை மனைவியோடும் செய்யப்படுவதாகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி, எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற்பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்.