ஸ்வாமி ஓங்காராநந்தர்

பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் 

 ஓம் ஸ்ரீகுருப்யோ நம:

பூஜ்யஸ்ரீ ஸ்வாமீ ஓங்காராநந்தர் அவர்கள், ஆன்மிக உலகின் ஓர் அருட்பொக்கிஷம். ஹிந்து தர்மத்தின் அரணாக, ஸநாதந தர்மத்தின் குரலாகத் திகழ்ந்தவர்.  திருக்குறளைக் கசடறக் கற்று, அதன்படி வாழ்ந்து, உலக மக்கள் அனைவருக்கும் அதன் உள்ளார்ந்த பொருளை, உபதேசித்த உத்தமர். வேத உபநிஷதங்களைக் கற்றால்தான் திருக்குறளின் பெருமையை உள்ளவாறு அறிந்துகொள்ள முடியும் என்று முழங்கியவர். 

வேதநெறிப்படி வாழ்ந்த தெய்விகப் பெற்றோர்க்கு மகவாகப் பிறந்து, வேதத்தாயின் திருமடியில் தவழ்ந்தவர். ஸ்ரீக்ருஷ்ண யஜுர் வேதத்தை முறையாகக் கற்றவர். திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் பூஜ்யஸ்ரீ சித்பவாநந்த ஸ்வாமிஜீ அவர்களிடம் துறவற தீக்ஷை பெற்றவர். பரமபூஜ்யஸ்ரீ பரமார்த்தாநந்த ஸ்வாமிஜீ அவர்களிடம் அத்வைத வேதாந்த சாஸ்த்ரத்தை எட்டு ஆண்டுகள் தொடர்ந்து முறையாகக் கற்கும் பெருவாய்ப்பைப் பெற்றவர்.

தேனி வேதபுரியில், ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆச்ரமத்தை நிறுவி, அங்கு ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீடத்தை அமைத்து, அறப்பணிகளையும் ஆன்மிகப் பணிகளையும் செவ்வனே நிகழ்த்தியவர்.

ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள், புதுக்கோட்டை ஸ்ரீபுவநேச்வரீ அவதூத வித்யாபீடத்தின் பீடாதிபதியாகப் பல அறப்பணிகளையும் ஆன்மிகப்பணிகளையும் திட்டமிட்டு நடத்தியவர். ஜகந்மாதா ஸ்ரீபுவநேச்வரிக்குக் கல்ஹாரத் திருப்பணி நடத்த அருள் ஸங்கல்பம் செய்தவர்.

வடமொழியும் தென்தமிழும் இவரது இரு கண்கள். பாரத தேசம் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்து, வேதத்தின் செய்தியினை முரசறைந்தவர். பாரதப் பண்பாட்டைப் போற்றிப் பாதுகாத்து வளர்க்க விரும்பும் ஸநாதந தர்மத்தின் தொண்டராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள், பரமபூஜ்யஸ்ரீ தயாநந்த ஸரஸ்வதீ அவர்களால் தர்ம ரக்ஷண ஸமிதியின் தலைவராக நியமிக்கப்பட்டு, அவ்வமைப்பைத் திறம்பட வழிநடத்தி வந்தார். 

கூர்த்த மெய்யறிவாளராகிய ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள், வேதாந்த சாஸ்த்ரங்களை அற்புதமாக உபதேசிக்கும் ஆற்றல் படைத்தவர். திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், கைவல்ய நவநதீம், தாயுமானவர் பாடல்கள் முதலிய பல நூல்களின் ஆழமான உட்கருத்துக்களை எடுத்தியம்புவதில் ஈடுஇணையற்றவர்.

திருக்குறளையும் பகவத்கீதையையும் ஒப்பிட்டு இவர் வழங்கிய கருத்துக்கள், ஆன்மிக உலகிற்கு மிகச் சிறப்பான பங்களிப்பாகத் திகழ்கின்றன.

பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற வகுப்புக்கள், முதியவர் முதல் இளைஞர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவை. ஆன்மிகம், வாழ்வியல் குறித்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைக் கூறி, இளைய தலைமுறையினர் பலரை வழிநடத்திய இவரது பணி போற்றுதலுக்குரியது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே பேசி, புத்துணர்வூட்டி வந்தார். காட்சிக்கு எளியவராக, நகைச்சுவை உணர்வு மிக்கவராக விளங்கினார். 

மாணவருக்கும், இல்லறத்தாருக்கும், வாநப்ரஸ்தர்களுக்கும், துறவிகளுக்கும் ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். அறத்தின் முக்கியத்துவத்தை இடையறாது எடுத்துக் கூறிவந்த ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள் வாழ்க்கையைக் குறித்த பரந்த விசாலமான பார்வையை உடையவர். எந்த ஒரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களில், திறந்த மனதுடன் சிந்திக்கக் கூடிய, பிறரையும் சிந்திக்க வைக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். திருவாசகம் முற்றோதுதல், தாயுமானவர் பாடல்கள் முற்றோதுதல், திருக்குறள் முற்றோதுதல் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வந்தார்.

ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், மஹாகவி பாரதியாரின் பக்தர்.

உள்ளந்தோறும் வள்ளுவம் என்ற அமைப்பின் வாயிலாக, திருக்குறளை முறையாகக் கற்றுத் தந்தார். நாள்தோறும் வாட்ஸ்அப் வாயிலாக இருபதாயிரத்திற்கும் அதிகமானோர், கீதை, திருக்குறள் ஆகிய இரண்டையும், தமிழிலும் ஆங்கிலத்திலும் கேட்டுப் பயன்பெற்று வந்தனர். ஸ்ரீஸ்வாமிஜீ அவர்களின் வேதாந்த சாஸ்த்ர வகுப்புகள், கீதை விளக்கங்கள் முதலானவை, யூ ட்யூப் வாயிலாக உலகின் பல மூலைமுடுக்குகளிலும் உள்ள ஆன்மிக அன்பர்களைச் சென்றடைவது குறிப்பிடத்தக்கது.

ஆத்மவித்யா என்ற ஐந்தாண்டு ஆன்மிகக் கல்வித்திட்டத்தைத் தொடங்கி,  இணையத்தின் மூலம் முறையாகக் கற்பித்து வந்தார். தற்போது ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள் பூதவுடலை உகுத்துவிட்டாலும், ஸ்ரீஸ்வாமிஜீ அவர்கள் முன்பு நிகழ்த்திய வகுப்புகளின் ஒளிப்பதிவுகளைக்கொண்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மெய்யன்பர்கள் இதில் கற்று பயனடைந்து வருகின்றனர்.

பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்களின் திருக்குறள் உபதேசங்களை உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்து சிறந்த பயனைத் தரவே,  இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளைக் கற்று, அதன்படி வாழ்வதே நாம் ஸ்ரீஸ்வாமிஜீ அவர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகும். 

வாழ்க வள்ளுவம்! வளர்க மனிதநேயம்!