திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள் மனிதநேயத்தையும் ஆன்மநேயத்தையும் வளர்க்கும் சிறந்த வாழ்வியல் நூலாக உலக அறிஞர் பெருமக்களால் போற்றப்படுகின்றது.

திருக்குறளில் உள்ள கருத்துக்கள், பாரத நாட்டில் தோன்றிய எந்த சமயம் அல்லது எந்த சித்தாந்தக் கருத்துக்களுக்கும் முரண்படாதிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

வரலாற்றுப்படி திருவள்ளுவரின் காலம் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைக்கும் மக்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழிநடையில் திருக்குறள் அமைந்திருப்பது, மாபெரும் வியப்புக்குரியது. இலக்கணம் ஓரளவு அறிந்தவர்கள்கூட, இந்நூலில் உள்ள குறட்பாக்களுக்கு எளிதில் பொருள் அறிந்துகொள்ள முடியும்.

வடமொழி சாஸ்திரங்களின் கருத்துக்களையும், திருக்குறள் மூலமாக எளிதில் விளக்க முடிவது, எனது அனுபவத்தில் கண்ட உண்மை. திருக்குறளை எடுத்துக்கூற வேண்டுமென்றால், பல சாஸ்த்ர நூல்களை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், திருக்குறளை நன்கு ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்ள இயலாது.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று மஹாகவி பாரதியார் பாடியதற்கிணங்க, இப்படிப்பட்ட ஓர் உயர்ந்த நூல், தமிழ்மொழியில் நமக்குக் கிடைத்திருப்பது நாம் செய்த பெரும்பேறு.

திருக்குறளின் துணைகொண்டு நாம் வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறிகளை அறிந்துகொள்ள முடியும்.

திரு என்பது தமிழில் மரியாதையைக் குறிக்கின்ற அடைமொழியாக இருக்கிறது. (திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருக்குறள்). திரு என்ற சொல்லுக்கு வேதம் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. குறள் என்றால் குறுகிய பாக்கள். குறள் வெண்பா என்கின்ற செய்யுள் வடிவத்தில் அமைந்துள்ளது.

திருவள்ளுவ மாலையில் மாங்குடி மருதனார் என்ற புலவர், வேதப்பொருளாய் மிகவிளங்கி என்று பாடியிருப்பதுபோல், திருக்குறள் வேதப்பொருளாக விளங்குகிறது.

அனைவரும் திருக்குறளை ஓதி, பொருளுணர்ந்து, அறிவுநலம், மனநலம், சொல்நலம், உடல்நலம், செயல்நலம், உறவுநலம், பொருள்நலம் ஆகிய அனைத்து நலன்களையும் பெற்று அமைதியான ஆநந்தத்தை உணர, திருவள்ளுவப் பெருமானின் திருவடிகளை உளமாரச் சிந்தித்து போற்றி வணங்கி மகிழ்கிறேன்.

அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !

வாழ்க வள்ளுவம் ! வளர்க மனிதநேயம் !

ஸ்வாமீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள்

(சாதுர்மாஸ்ய வ்ரத புண்யகாலம்) ஸ்ரீவிகாரி, ஆவணி 25,
புதங்கிழமை (11.09.2019)