குறள்

இடன் அறிதல்
குறள் # 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது
குறள் # 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும்
குறள் # 493
ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
குறள் # 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
குறள் # 495
நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
குறள் # 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
குறள் # 497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்
குறள் # 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
குறள் # 499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தொடு ஒட்டல் அரிது
குறள் # 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு